நெட் நியூட்ராலிட்டி (இணைய சமத்துவம்) என்றால் என்ன? நெட் நியூட்ராலிட்டி (இணைய சமத்துவம்) என்பது இணையத்தில் பயணிக்கும் அனைத்து தரவுகளையும் சமமாக நடத்துவதேயாகும். இதோ இந்த டேட்டா பேக்கெட்டுகள் போல். அதாவது நம்மைப் போன்ற பயனர்கள் தான் எந்தெந்த சாதனங்கள், மென்பொருட்கள், வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். இணையம் என்பது சுதந்திரமானதாக இருக்க வேண்டும். இணையத்தில் ஒரு பயனருக்கு எது வேலை செய்யும் செய்யாது என்பதை எந்த ஒரு மூன்றாம் தரப்பினரும் தீர்மானிக்க உரிமையில்லை. இதை நீங்கள் ஏன் கவனிக்க வேண்டும்? நாள்பொழுதும் நீங்கள் தேடும் தகவல்கள், நண்பர்கள், குடும்பங்களோடு நினைத்த நொடியில் தொலைதூர தொடர்பு கொள்ள உதவும் இந்த அற்புதமான கட்டமைப்பு இப்போது தகர்க்கப்படும் அபாயத்தில் உள்ளது. இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சமத்துவமான இணைப்பு என்பது யார் அனுப்புகிறார், என்ன அனுப்புகிறார் அல்லது யார் அதைப் பெறுகிறார் என்று எந்தப் பாகுபாடுமின்றி செயல்படும் இணைப்பு. அனுப்புநரோ அல்லது பெறுநரோ அவரவர் சக்திக்கேற்ப எவ்வுளவு கட்டணம் செலுத்தி இணைய இணைப்பைப் பெற்றிருந்தாலும், எந்த மென்பொருள் கொண்டு தொடர்பு கொண்டாலும், அதை எந்த வடிவத்தில் அனுப்பினாலும் எந்தப் பாரபட்சமும் பாராமல் சமமாக நடத்துகிறது. இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமானால்... இணையத்தை ஒரு சாலைபோலக் அதில் இந்த டேட்டா பேக்கெட்டுகள் நகர்வது போலக் கற்பனைச்செய்துக் கொள்ளுங்கள். இந்தச் சாலையானது இணையத்தில் உள்ள ஒவ்வொரு கணினி, ஸ்மார்ட்ஃபோன் போன்ற சாதனங்களை இணைக்கும் சாலை. சாலைகளின் ஒவ்வொரு குறுக்குச் சந்திப்புகளிலும் ரூட்டர் எனப்படும் திசைவி நிறுவப்பட்டுள்ளது. அது டேட்டா பாக்கெட்டுகள் எந்தச் சாலையில் சென்றால் அதன் இலக்கை அடையும் என்று வழிகாட்டும். அந்த ரூட்டருக்கு அந்தச் சாலையில் யார் வருகிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் பார்க்க எப்படி இருக்கிறார்கள், எங்கே செல்கிறார்கள், இல்லை என்ன வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கவலையில்லை. அதைப் பொருத்த வரை அனைவரும் சமமே. இவ்வாறு சமமாக இயங்கும் பட்சத்தில் என் நண்பர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், எந்தத் தொடர்பைப் பெற்றிருந்தாலும் என்னால் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். இணையத்தில் எந்த வலைப்பக்கத்தையும் விஜயம் செய்யவும் அல்லது விளையாடவும் அந்தச் சேவை எந்த நாட்டில் இருந்தாலும், யார் அதை வழங்கினாலும் சரி என்னால் பயன்படுத்த முடியும். இணையத்தில் எந்த வலைத்தளத்தையும் பயன்படுத்த, வீடியோவைப் பார்க்க இயலும். அதோடு இணையம் மூலம் கூட்டாகச் சேர்ந்து கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் செய்யவும் முடியும். டேப்லட், ஸ்மார்ட்ஃபோன், மடிக்கணினியென எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தி எந்தத் தடையுமின்றி செய்ய இயலும். இதுவே நாம் விரும்பும் இணையம். நாம் அனைவரும் ஒரே சமூகமாக அனைவரின் தகவலோடும், உதவியோடும் இந்த சமமான இணையம் மூலம் பயனடைகிறோம். இணையத்தில் எந்தத் தகவலையும் நாம் தேடிப் பெற, பயன்படுத்த இந்த கட்டமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது. இப்படி நாம் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் செய்வதன் மூலம், இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் மட்டும் பில்லியன் கணக்கில் சம்பாதித்துள்ளனர். நெட் நியூட்ராலிட்டி (இணைய சமத்துவம்): அனைவருக்குமானது. சமமானது. சரி, இப்போது அதற்கென்ன வந்தது? இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் இந்தக் கற்பனை செய்யப்பட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏறபடும் வாய்பு உள்ளதாகக் கூறுகிறது. இணைய சமத்துவத்தை குழிதோண்டி புதைப்பதே நிறுவனங்களின் இலக்கு. அவர்களுடைய இந்த கூற்று முற்றிலும் பொய்யானது, ஏனென்றால் அவை உண்மையான சாலைகள்போல் நிலையானவை இல்லை. இந்த நிறுவனங்களுக்கு வன்பொருள் வழங்கும் நிறுவனங்களின் கூற்றுப் படி இன்னும் முழுமையாகக் கையாளப்படாத கொள்ளளவு அப்படியே கிடக்கிறது. அதோடு, இணையத்தில் சேவை வழங்கும் நிறுவனங்கள் கூறுகையில் இணையத்தில் உள்ள தகவல் போக்குவரத்து என்பது நம்பமுடியாத அளவுக்கு மலிவான தொகையில் வழங்க முடியும் என்பதே. இருந்தும் ஏன் இந்த இணைப்பு வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் இவ்வாறு கூறுகிறார்கள்? இணையத்தின் மூலம் சமூக வலைதள நிறுவனங்கள், தேடுதள நிறுவனங்கள், வீடியோ சேவை வழங்கும் நிறுவனங்கள் போன்றவை கொள்ளை இலாபம் சம்பாதிப்பதைக் கண்டு பொறாமை கொண்டுள்ள இணைப்பு வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்களும் இலாபம் சம்பாதிக்க தங்கள் அதிகாரத்தை இணைப்பை வழங்குவதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் பயன்படுத்தி இணையத்தில் உள்ள நாம் விரும்புகிற இந்தச் சமத்துவத்தை அழிக்க நினைக்கின்றனர். அதை அவர்கள் எப்படி அடைய முயற்சிக்கிறார்கள்? இதை சாத்தியப்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்கள் முதலில் தகவல்களை பல வகைகளாகப் பிரிக்கிறார்கள், பல சாதிகளைப் போல். இதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணைய முறை என்பது அடிமட்ட சாதியாக ஒரு குறிப்பிட்ட அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் உயர்ந்த சாதி தகவல்கள் செல்வதற்கு வழிவிட்டு நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரே இவை செல்ல இயலும். உயர்ந்த சாதியைச் சேர்ந்த தகவல்கள் தனித்துவம் பெறுவதற்காக இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் அதனை வழக்கமான இணைப்பிலிருந்து தனிமைப்படுத்தி சிறப்பந்தஸ்து வழங்கி அதனை கூடுதல் சந்தா மூலம் பெறுமாறு செய்யும். இது போல் பல நிலைகள் சாத்தியம். உதாரணத்திற்கு, சமூக வலைத்தளத்தைச் சேர்ந்த ஓர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த தகவலானது சாலையைக் கடக்க கட்டணம் செலுத்த வேண்டுமாயின், அதன் பெறுநர் கூடுதல் சந்தா செலுத்த வேண்டிருக்கும். இதே போல இணையத்தில் செய்திகள் படிக்க, விளையாட என்று கூடுதல் சந்தா நிர்ணயிக்கக்கூடும் அபாயம் உள்ளது. இது எப்படி செயல்படுத்தப்படுகிறது? நாம் மீண்டும் தகவல் தொடர்புகளைச் சாலைகள் போன்று கற்பனை செய்துக்கொள்வோம். முன்பு தகவல் பாகெட்டுகளை சரியான திசையில் திருப்பிவிட்ட ரூட்டர்கள், இப்போது மேம்படுத்தப்பட்டு சோதனைச் சாவடிகளாகச் செயல்பட துவங்கி அதின் வழியாக வரும் தகவல்களைச் சாதிவாரியாகப் பிரிக்கிறது. அது எந்தச் சாதியைச் சேர்ந்தது என்பதைப் பொறுத்து பிரதான சாலையிலிருந்து பிரிந்து அதெற்கென வடிவமைக்கப்பட்ட சாலையில் பயணிக்க வைக்கப்படும்.